கர்நாடகத்தில் கொரோனா பரவல் பிப்ரவரி 15-ந் தேதிக்குள் உச்சம் தொடும்: மந்திரி சுதாகர்..!!
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 85 சதவீதம் பேர் பெங்களூருவில் உள்ளனர். வைரஸ் தொற்று பரவலை தடுக்க விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் பரிசோதனையை பணிகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் உச்சத்தை தொடும். மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 28 ஆயிரத்து 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண படுக்கைகளின் எண்ணிக்கையை 42 ஆயிரமாக அதிகரித்துள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் 5 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேருகிறார்கள்.
2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களை கொரோனா தாக்கினால், அவர்கள் ஆஸ்பத்திரியில் சேரும் நிலை ஏற்படுவது இல்லை.
அத்தகையவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதால் வீட்டு தனிமையிலேயே அவர்கள் சரியாகி விடுகிறார்கள். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் 100 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டு முடிப்போம்.
கலபுரகி, மைசூரு, பெலகாவி, பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த ஆய்வகங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நிபுணர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். வைரல் லோடு அதிகமுள்ள மாதிரிகள் மட்டுமே மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.