அவுரங்காபாத் சுற்றுலா தலங்களை மூட வேண்டாம்: ஆதித்ய தாக்கரேவுக்கு கோரிக்கை…!!!!
மராட்டியத்தின் சுற்றுலா தலைநகரம் என அழைக்கப்படும் அவுங்காபாத்தில் உலக புகழ்பெற்ற அஜந்தா, எல்லோரா குகைகள், பீபி கா மக்பாரா, தேவ்கிரி தவுலதாபாத் கோட்டை மற்றும் அவுரங்காபாத் குகை ஆகிய முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன.
இந்திய தொழில் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்த 5 சுற்றுலா தலங்களும் கொரோனா முதலாவது மற்றும் 2-வது அலையின் போது அடைக்கப்பட்டன.
இதன் பின்னர் அனுமதி அளிக்கப்பட்டபோதும், தற்போது மீண்டும் தொற்று பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது. மேலும் சுற்றுலா தலங்களை நம்பியுள்ள பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது கொரோனா 3-வது அலை மராட்டியத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவுவதை தடுக்க இந்த சுற்றுலா தலங்கள் மீட்டும் மூடப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவுரங்காபாத் சுற்றுலா வளர்ச்சி அறக்கட்டளை சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மூடப்பட்ட இடத்தில் இயங்கும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அவுரங்காபாத் சுற்றுலா தலங்கள் அப்படிப்பட்டது இல்லை.
தொற்று நோய் பரவுவதை கருத்தில் கொண்டு இதுபோன்ற சுற்றுலா தலங்கள் வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அவற்றை முழுமையாக மூடக்கூடாது.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அவுரங்காபாத் சுற்றுலா வளர்ச்சி அறக்கட்டளையின் செயற்பாட்டாளர் சுனில் கோத்தாரி கூறுகையில், “அவுரங்காபாத்தில் உள்ள நினைவு சின்னங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை மூடுவது இப்பகுதியில் முக்கிய தொழிலான சுற்றுலாத்துறையை மோசமாக பாதிக்கும். குறிப்பாக போக்குவரத்து துறையில் வேலை செய்பவர்கள், கைவினை பொருட்கள் தயாரிப்பாளர்கள், நினைவு பரிசு விற்பனையாளர்கள், தெரு விற்பனையாளர்கள் ஓட்டல் ஊழியர்கள் போன்றவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பதிக்கப்படும்” என்றார்.