கஜகஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: அதிபர் காசிம் குற்றச்சாட்டு…!!!
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் விலையை அரசு 2 மடங்காக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் புரட்சி வெடித்தது. பின்னர் அந்த நாட்டின் முக்கிய நகரமான அல்மாட்டியில் மக்கள் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதில் அல்மாட்டி நகரில் உள்ள அதிபர் மாளிகை, மேயர் அலுவலகம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் இந்த வன்முறையில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இதை தொடர்ந்து, அல்மாட்டி நகரில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ், இந்த வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சதி இருப்பதாக குற்றம் சாட்டியதோடு வன்முறையில் ஈடுபடுபவர்களை முன்னெச்சரிக்கை இன்றி சுட்டுத்தள்ளவும் உத்தரவிட்டார். இருந்தபோதிலும் போராட்டம் மற்றும் வன்முறையின் காரணமாக அல்மாட்டி நகரில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டில் நடந்த வன்முறை ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முயற்சி என அதிபர் காசிம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த சதி முன்னாள் சோவியத் நாடுகளின் ராணுவ கூட்டணி தலைவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். எனினும் அவர் எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இதற்கிடையில் கஜகஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தால் குறிவைக்கப்பட்டுள்ளதாக ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.