வவுனியாவில் நோயாளர் வீட்டுத்தரிசிப்பு செயற்றிட்ட நடவடிக்கை – விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!!
வவுனியா வைத்தியசாலை ஊடாக நோயாளர் வீட்டுத் தரிசிப்பு செயற்றிட்ட நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி க.ராகுலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
வடமாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக மாகாண சுகாதார திணைக்களத்தினால் மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்பட்டுள்ள நோயாளர் வீட்டுத்தரிசிப்பு செயற்றிட்டம் ஊடாக நீண்டகாலம் கடும் தொற்றுக்குள்ளாகி இயங்குவதற்கு இயலாத மாற்றுத்திறனாளிகள், கடும் தொற்றிற்குள்ளாகி வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதில் கடினங்களை எதிர் நோக்குகின்ற நோயாளர்களுக்கான தேவைகளை மாவட்ட வைத்தியசாலையிலுள்ள மருத்துவக்குழாம் அவர்களுடைய வீட்டிற்கு சென்று அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு செயற்றிட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பிக்கப்படவுள்ளது .
முக்கியமாக இரண்டு விடயங்கள் ஒன்று மாற்றுத்திறனாளிகள் , அல்லது விஷேட தேவையுடைய சிறுவர்களோ, நோயாளர்களோ கடுமையான தொற்றுக்குள்ளாகி அதனூடாக வைத்தியசாலைக்கு வருவதற்கு முடியாதவர்கள் பாரிசவாதம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையிலுள்ள நோயாளர்கள் போன்றவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது இச் செயற்றிட்டம் அவசர நோயாளர்களுக்கான தேவையை பூர்த்தி செய்கின்ற செயற்றிட்டம் அல்ல. மக்களுடைய பொருளாதார பிரச்சினை, பயணச்சிக்கல்கள் பெரும்பாலான விடங்களை கருத்திற்கொண்டு இச் சிகிச்சைமுறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது .
நோயாளர்களுக்கான சிறுநீரக டியூப் மாற்றுதல், அவர்களுக்கு உணவு செல்கின்ற டியூப் மாற்றுதல், படுக்கையிலுள்ள நோயாளர்களுக்கு ஏற்படுகின்ற புண்கள் அல்லது மருந்து கட்டுதல் போன்ற செயற்றிட்டங்களை வீட்டிற்கு சென்று முன்னெடுக்கப்படவுள்ளது .
இந்நடவடிக்கைக்கு விஷேட தொலைபேசி இலக்கமான 0772772677 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டால் ஒரு மணி நேரத்தில் அல்லது பிற்பகலில் தொடர்பு கொண்டால் மாலையில் இச் சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இச் சேவையை பெற்றுக்கொள்ளுபவர்களுக்கு எவ்வளவு கால நேரத்திற்குள் இச்சேவையை வழங்க முடியும் போன்ற விபரங்கள் வழங்கப்படும்.
முதற்கட்டமாக வவுனியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இச் சேவையை வழங்குவதுடன் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரையுடம் இச் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது . இதனால் ஏற்படும் அனுபவங்களை கொண்டு நேரம் மற்றும் பிரதேசங்கள் வேறுபட்டு கொண்டிருக்கும். இச் சேவையை வெற்றிகரமானதாக கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”