டெல்லி சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் கொரோனா பரவியது…!!
கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், டெல்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள மூன்று சிறைச்சாலைகளில் மொத்தம் 66 கைதிகள் மற்றும் 48 சிறை ஊழியர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா உறுதியானது. இதில் 42 கைதிகள் திகார் சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் 24 கைதிகள் மண்டோலி சிறையில் உள்ள கைதிகள்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 48 ஊழியர்களில், 34 பேர் திகாரைச் சேர்ந்தவர்கள். ரோகினி சிறைச்சாலையில் 6 சிறை ஊழியர்கள் மண்டோலி சிறைச்சாலையில் உள்ள 8 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இதனிடையே லேசான பாதிப்பு காணப்படும் கைதிகளுக்காக சிறைச்சாலைகளில் பல மருத்துவ தனிமைப்படுத்தும் செல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்று டெல்லி சிறைச்சாலைகள்துறை டைரக்டர் ஜெனரல் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார்.
திகார், மண்டோலி மற்றும் ரோகினி சிறை வளாகங்களில் கொரோனா பரவுவதைத் தடுக்க சிறை மருத்துவமனைகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. திகார் சிறைச்சாலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை விரைவில் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறைப் பணியாளர்கள் மற்றும் கைதிகளிடையே சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. கைதிகள் பெரும்பாலும் தங்கள் சிறை வளாகத்திற்குள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனவரி 7 ஆம் தேதி வரை, டெல்லி சிறைகளில் உள்ள மூன்று சிறைகளிலும் மொத்தம் 18,528 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.