;
Athirady Tamil News

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-1 மாணவி: 6 ஆண்டுகளாக தவியாய் தவிக்கும் பரிதாபம்…!!

0

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களது உறவினராலோ, ஆண் நண்பராலோ பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது முன்வந்து புகார் அளித்து வருகிறார்கள்.

இதுபோன்ற புகார்கள் மூலம் போலீசார் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சிறுவயதில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புகள் அவர்களது மனதில் நீண்ட வடுவாகவே மாறி விடுவது உண்டு. அவர்களது ஆயுள் முழுவதும் அந்த வலி இருந்து கொண்டே இருக்கும் என மருத்துவ வல்லுனர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

தங்களது அறியாத வயதில் நெருங்கிய உறவினர்களாலேயே அதிகளவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி பாதிக்கப்படும் சிறுமிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலையிலேயே இருந்து வருகிறார்கள்.

அதுபோன்று ஒரு பாதிப்பை 6 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த சிறுமி ஒருவர் தற்போது பிளஸ்-1 படிக்கும் நிலையில் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கொட்டித்தீர்த்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு வர்தா புயலின்போது கூட்டு குடும்பமாக வசித்த நேரத்தில்தான் புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். பெரியப்பா உறவு முறை கொண்டவரே சிறுமியை ஈவுஇரக்கமின்றி பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

மாடியில் உள்ள தனது வீட்டுக்கு விளையாட வந்த நேரங்களில் எல்லாம் சிறுமியை கட்டிப்பிடித்து அவரது விருப்பத்துக்கு மாறாக பாலியல் அத்துமீறல்களில் அவர் ஈடுபட்டு இருக்கிறார்.

அதன்பிறகு சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருப்பதற்கு அச்சப்பட்டுள்ளார். தனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நீ மட்டும் வீட்டில் இரு என்று கூறி விட்டு வெளியில் சென்றால் அதற்கு சிறுமி ஒத்துக்கொள்ள மாட்டார். யாராவது ஒருவர் என்னோடு இருங்கள். தனியாக இருப்பதற்கு பயமாக உள்ளது என்று கூறி வந்தார்.

இதனை சிறுமியின் பெற்றோர் ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயது குறைவாக இருப்பதால் பயப்படுகிறாள். போக போக சரியாகி விடும் என்று நினைத்தனர்.

ஆனால் அந்த சிறுமிக்கோ பயம் அதிகரித்துக் கொண்டே சென்றது. பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு தனியாக வருவதற்கும் அஞ்சி நடுங்கினாள். ஆண்களை கண்டாலே சிறுமியின் உடல் நடுங்க தொடங்கியது. இதுபோன்று சிறுமியின் உடல் உதறல் எடுப்பதை பார்த்தபிறகு தான் பெற்றோர் இனி என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.

இதையடுத்து சிறுமியை தனியாக அழைத்துச் சென்று எதற்காக இப்படி பயப்படுகிறாய்? ஆண்களை கண்டாலே ஏன் பயப்படுகிறாய்? என அடுக்கடுக்காக கேள்விகளையும் எழுப்பினர்.

பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயங்கிய சிறுமி பின்னர் மெல்ல மெல்ல தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் விவரித்துள்ளாள். 5-ம் வகுப்பு படித்தபோது மாடியில் வைத்து தன்னுடன் 6 ஆண்டுக்கு முன்பு பெரியப்பா தவறாக நடந்து கொண்டதாகவும் அதன்பிறகுதான் இதுபோன்று எனக்கு நடுக்கம் ஏற்படுவதாகவும் அவர் கூறி உள்ளார்.

தற்போது மாணவி பிளஸ்-1 படித்து வரும் நிலையில் இப்படியே இருந்தால் அவளது எதிர்காலம் பாதிக்கப்படும் என அதுபற்றி வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தேவிகா (பொறுப்பு) தலைமையில் பெண் போலீசார் விசாரணை நடத்தினர்.

பெண் போலீசார் நடத்திய விசாரணையில் பெற்றோரிடம் கூற தயங்கிய விசயங்களை எல்லாம் மாணவி கொட்டித் தீர்த்துள்ளார். பெரியப்பா வீட்டில் இருந்த தனது சகோதரியுடன் நான் மாடிக்கு சென்று விளையாடியபோது பலமுறை என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று மாணவி கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக மாணவியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வர்தா புயல் வீசிய நேரத்தில் ஒரே மாதத்தில் 5 முறை இதுபோன்ற பாலியல் அத்துமீறல் மாணவிக்கு நேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து பெரியப்பா உறவு முறை கொண்ட 59 வயது நபரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். ஆட்டோ டிரைவரான அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

பிளஸ்-1 மாணவி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் 6 ஆண்டுக்கு முன்பு தொடர்ந்து நடைபெற்ற பாலியல் அத்துமீறலுக்கு பிறகுதான் எனது உடலும், மனமும் கடுமையாக பாதிப்புக்குள்ளானது என வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

இதன் அடிப்படையில்தான் ஆட்டோ டிரைவரான முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது 6 ஆண்டுகளுக்கு முன்பு தெரியாமல் அதுபோன்று செய்து விட்டேன் என கூறியுள்ளார். இருப்பினும் சிறுமி மீதான வன்கொடுமை என்பதால் பாரபட்சமின்றி பெண் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மாணவி தன்நிலை மறந்து பித்து பிடித்தவர் போல பல நேரங்களில் இருந்துள்ளார். ஒருவித அச்ச உணர்வுடன் யாருடனும் சரியாக பேசாமல் கடந்த 6 ஆண்டுகளாக அவர் தவியாய் தவித்து வந்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு போலீசாரும், குழந்தைகள் நல அதிகாரிகளும் கவுன்சிலிங் மூலம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

எதற்கும் பயப்பட வேண்டாம் எல்லாம் சரியாகி விடும். உன் மனதில் இருக்கும் அச்ச உணர்வை போக்கிக் கொள். இந்த சமுதாயத்தில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்பது போன்ற அறிவுரைகள் மாணவிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக தனது மனதில் இருந்த பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வு தற்போது மாணவிக்கு ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவியை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியின் மனச்சுமை குறையும் என்றும் விரைவில் அவர் மற்ற மாணவிகளை போல கலகலப்பாக மாறி விடுவார் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.