முதலைக்கு வாக்களித்து விட்டு மக்கள் இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர்! சி.வி.விக்னேஸ்வரன்!! (வீடியோ)
முதலைக்கு வாக்களித்து விட்டு தெற்கு மக்கள் இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேள்வி: உங்கள் கட்சியின் பதிவு மற்றும் நகர்வு தொடர்பாக?
பதில்: எமது கட்சி 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, இன்று 3 வருடங்கள் கடந்த நிலையில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்படியாக இளைஞர்கள் ஒன்றிணைக்கப்பட்டு இளைஞர் கூட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. ஆனால் சமூகத்துக்கு சேவை செய்யும் இளைஞர்கள் குறைவு. அவர்கள் திடீர் என்று அரசியல் பணக்காரர்களாகவும், தலைவர்களாகவும் வருவதற்கு முயற்சிக்கின்றனர்.
கொரோனா காரணமா அடிமட்ட உறுப்பினர்களை தெரிவு செய்தல், மற்றும் அடுத்த கட்ட நகர்வுகளை எம்மால் செய்ய முடியாமல் போயுள்ளது. இனி தான் அவற்றை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளோம்.
கேள்வி: வடக்கு கிழக்கு நிலைவரம் தொடர்பில்?
பதில்: தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து செயற்படவேண்டும். அவர்கள் யாரை நம்புவது என்ற குழப்பத்தில் உள்ளனர். யாருடன் சேர வேண்டும் என்பதிலும் குழப்ப நிலை காணப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் அரசியல் வாதிகளை விட, அரசியல் தலைவர்கள் தான் தேவைப்படுகிறார்கள். அரசியல்வாதிகள் தேர்தலை பற்றி தான் நினைத்து நடப்பார்கள். இப்போது கிழக்கில் இனப்பரப்பலில் குழப்பம் ஏற்பட்டு, இன முறுகல் நிலைக்கு வந்துள்ளது.
சிறந்த தலைவர்கள் இன்மையால் தான், ஜே.வி.பி மற்றும் தேசிய கட்சியை மக்கள் ஆதரிக்கின்றனர். தமக்கு தேவையானவற்றை யார் தருகிறார்கள் என்று மக்கள் பார்த்து அவர்கள் பக்கம் செல்வதற்கு முயற்சிக்கின்றனர். எங்களை நாம் திருத்தி கொண்டால், மக்கள் எம்மை நாடி வருவார்கள்.
கேள்வி: தமிழ் கட்சிகள் இந்தியாவுக்கு அனுப்பும் கடிதம் தொடர்பாக?
பதில்: அந்த கடிதம் தேவையானது. தமிழ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றனர். காணி அபகரிப்பு, படையினர் பிரசன்னம் அதிகரிப்பு, சிங்கள அதிகாரிகள் நியமனம், யாழ் பல்கலையில் சிங்கள மாணவர்களின் அனுமதி அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினை இங்கு அதிகரிக்கிறது.
இந்த நேரத்தில் நாம் இந்தியாவுக்கு இவ்வாறான ஒரு கடிதத்தை அனுப்பினால், அரசு எமக்கு எதிராக செய்வதற்கு எத்தணிக்கும் செயற்பாடுகளை குறைக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம். 13ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரட்டும். அது எமக்கு நன்மையை தரும்.
ஆனால், அது எமக்கு தீர்வைத் தராது. அதை நாம் சர்வதேசத்திடம் இருந்து தான் பெறமுடியும். வடக்கு மாகாண அதிகாரம் ஆளுநர் உள்ளிட்ட தரப்புகளுக்கு கை மாறியுள்ளது. மாகாண சபை தேர்தல் கட்டாயமானது. 18 ஆம் திகதியளவில் அது இந்திய உயர் ஸ்தானிகரிடம் கையளிக்கப்படும்.
கேள்வி: யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் தெடர்பாக?
பதில்: நான் அவரை சில தடவைகள் சந்தித்து உள்ளேன். அதுவும் உத்தியோகபூர்வம் இல்லை. அவர் இப்போது தனது கடமைகளை சரியாக செய்கிறார். அதுவும் ஈ.பி.டி.பி போன்ற எதிர் கட்சிகளுடன் சேர்ந்து செய்கிறார். அது அவருடைய கெட்டித்தனம்.
கேள்வி: மக்களின் நெருக்கடிகள் தொடர்பாக?
பதில்: தெற்கிலே மக்கள் நம்பி கெட்டார்கள். எங்களை இராமன் ஆண்டால் என்னா, இராவணன் ஆண்டால் என்ன. தெற்கு மக்கள் முதலைக்கு வாக்களித்து விட்டு இப்போது வீதிக்கு வந்துள்ளனர். நாம்தான் எம்மை பாதுகாக்க வேண்டும். 30 வருடங்கள் நாம் எம்மை நிர்வகித்து வந்தோம். கட்சிகள் பிரச்சினை வந்தபின்னர் பார்ப்பவர்கள். நாம் வர முன்பு பாதுகாக்கவும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.
கேள்வி:இ லங்கை அரசின் கடன் பிரச்சினை?
பதில்: இந்திய அரசும் இலங்கை அரசும் சேர்ந்து எம்மை கைவிட்டது என்ற நிலை ஏற்படாது. ஆனால் இலங்கை அரசை தங்கள் விடயத்துக்காக கைக்குள் இந்தியா வைக்கும் நிலை ஏற்படலாம். அதற்கு இந்தியாவுக்கு அவசியம் உள்ளது. இந்திய தமிழ் மக்களின் வேண்டுதல் காரணமாக அவர்கள் எமக்கு சில விடயங்களைச் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.
கேள்வி: மாகாண சபை தேர்தல்?
பதில்: மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பில் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. அதை முதலில் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, தேர்தலை நடத்துங்கள் என்றாவது நாம் கேட்க முடியும். 13 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கு, இந்திய இலங்கை ஒப்பந்தம் தான் வழி வகுத்தது.
இதனால் இந்தியா இவற்றை கேட்க கூடிய உரித்து உள்ளது. ஆகவே திருத்தத்தை அமுல்படுத்துங்கள். ஆனால் அது தமிழ் மக்களுக்கு தீர்வை தராது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலும் பயத்தில் தான் அதை நிறுத்தி வைத்துள்ளார்கள். ஏன்னென்றால் மக்களின் எண்ணம் இப்போது என்னவென்று தெரியும்.
கேள்வி: மலையக மக்கள் மற்றும், கட்சிகள் தொடர்பாக?
பதில்;: அவர்களுக்கும் சமமாக எல்லாம் வழங்கவேண்டும். வடக்குகிழக்கு ஒன்றாக்கப்பட்டாலும், முஸ்லீம் மக்களுக்கு தனியான அலகு வழங்கப்பட வேண்டும் என்பது எம்முடைய கட்சியின் நிலை. மலையக தமிழ் கட்சிகள் சில விடயங்களில் எம்முடன் சேர்ந்து தான் நடக்கிறார்கள்.
ஆனால், எம்முடன் சேருவதால், தங்கள் மக்களுக்கும் கிடைவேண்டியவை, சிங்கள தரப்பில் இருந்து கிடைக்காதோ என்றும் நினைக்கிறார்கள். நாங்கள் கருத்து பரிமாற்றம் செய்கின்றோம். சில விடங்களை சேர்ந்து செய்வோம் – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”