அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைய வேண்டி பிரார்த்தனை – யாழில் அனைவருக்கும் அழைப்பு!! (வீடியோ)
அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைய வேண்டும் என பிரார்த்தித்து நாளை(13) யாழ்ப்பாணம் முற்றவெளியில் விடுதலை பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.இதற்கு மக்கள்,அரசியல் பிரமுகர்கள்,என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளது விடுதலைக்கான குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ் மக்கள்,குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பம் இரத்த கண்ணீர் வடிக்கிறது.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நாம் காத்திருந்து காலங்கள் கடந்து விட்டன.வெறுமனே 14 கைதிகளை விடுதலை செய்து விட்டு ,அனைத்து கைதிகளையும் விடுவித்தது போல அரசு காட்டிக்கொள்கிறது.
இந்த புதிய ஆண்டில் அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.எமது இனப் பிரச்சினைக்காக போராடியவர்கள் தான் தமிழ் அரசியல் கைதிகள்.அவர்களின் விடுதலையை நாம் உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இந்த விடுதலை பொங்கல் தொடர்பில் நாம் கூறிய போது , இது பற்றி கதைப்பதற்கு இப்போது நேரம் இல்லையென தெரிவித்து விட்டு வாகனத்தில் ஏறி சென்றுள்ளார்.
உண்மையில் இது ஒரு கவலையான விடயம்.இது அவர்கள் செய்ய வேண்டிய விடயம்.இப்படி தான் எமது தமிழ் தலைவர்கள் உள்ளனர்.
தமிழ் தலைவர்கள் இதை செய்ய முடியாது என்றால் எழுதி தர வேண்டும்.எமது அமைப்பு யாரின் தூண்டுதலிலும் அமையப்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”