;
Athirady Tamil News

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா…!!

0

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதன் விளைவாக வடகொரியா ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வந்த சூழலில், கொரோனா பரவல் காரணமாக அங்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளியது.

இதன் காரணமாக வடகொரியாவில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பஞ்சத்தில் தவித்து வந்தாலும், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் ராணுவத்திறனை வலுப்படுத்துவதில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கிம், இந்த ஆண்டு பொருளாதாரத்தை சீரமைப்பது மற்றும் உணவு பற்றாக்குறையை சரிசெய்வதில் மட்டுமே தேசிய அளவில் கவனம் செலுத்தப்படும் என கூறினார்.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணையை சோதித்தது. வடகொரியா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டி வரும் சூழலில் ஆண்டின் தொடக்கத்திலேயே வடகொரியா இப்படி ஒரு சோதனையை நடத்தி அதிரவைத்தது.

இந்தநிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை சோதித்தது. இது ஒரு வாரத்துக்குள் நடத்தப்பட்ட 2-வது ஏவுகணை சோதனை ஆகும்.

இதுகுறித்து தென்கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகாங் மாகாணத்தில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 700 கி.மீ. வரை பறந்து, கடலில் விழுந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே சமயம் வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதித்தது போல மீண்டும் ஒரு ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்திருக்கலாம் என தென்கொரியாவை சேர்ந்த வல்லுனர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை தங்கள் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு வெளியே விழுந்ததாக ஜப்பான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜப்பானை சுற்றியுள்ள கப்பல்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் பரிசோதித்து வருவதாக பிரதமர் புமியோ கிஷிடா கூறினார்.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து, தென்கொரியா நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்டி விவாதித்தது. இது வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் குறித்து வலுவான வருத்தத்தை வெளிப்படுத்தியது மற்றும் பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு வடகொரியாவை வலியுறுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.