;
Athirady Tamil News

தற்போது உள்ள பூஸ்டர் தடுப்பூசி திட்டம் பலன் தராது- உலக சுகாதார மையம் எச்சரிக்கை…!!

0

உலகம் முழுவதும் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 30 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 3.59 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கொரோனா வைரஸின் உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் வைரஸ்களும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி வந்தன. ஆனால் கொரோனா வைரஸ் உருமாருமாறி மக்களை பாதிப்பதால் பல நாடுகள் 3-வது தவணை தடுப்பூசியை, பூஸ்டர் தடுப்பூசி என செலுத்தி வருகின்றன. இந்தியாவிலும் முதியோர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு முதற்கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உருமாறிய கொரோனா வைரஸ்களை தடுக்க 4-வது தவணை தடுப்பூசியை அறிமுகம் செய்வது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றன.

பூஸ்டர் தடுப்பூசி
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் அனைத்து நாடுகளும் ஏற்கனவே 2 தவணை செலுத்திய தடுப்பூசியையே 3-வது தவணையாகவும் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளையே மீண்டும் பயன்படுத்து பலன் தராது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்து ஆராயும் உலக சுகாதார மையத்தின் நிபுணர்கள் கூறியதாவது:-

ஏற்கனவே செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தும் திட்டம் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பலன் தராது.

முதற்கட்ட தரவுகள் தற்போது பயனில் உள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக தீர்க்கமாக செயல்படவில்லை என கூறுகின்றன. இதனால் தான் ஒமைக்ரான் காட்டுத்தீயை போல பரவி வருகிறது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்களையும் ஒமைக்ரான் பாதிக்கிறது.

நோய் தொற்றுக்கு ஆளானவர்களை தீவிர பாதிப்பு, இறப்பில் இருந்து காப்பாற்றுவது மட்டும் இல்லாமல், நோய் தொற்று முதலில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதையே தடுக்கும் தடுப்பூசிகள் தான் நமக்கு தேவை. அவற்றை தான் நாம் உருவாக்க வேண்டும்.

அதுபோன்ற தடுப்பூசிகள் நமக்கு கிடைக்கும் வரை, தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும், அவை ஒமைக்ரான் மற்றும் எதிர்கால மாறுபாடுகளுக்கு எதிராக உலக சுகாதார மையம் பரிந்துரைத்த அளவிலான பாதுகாப்பைத் தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.