;
Athirady Tamil News

மாதகலில் உயிரிழந்த மீனவருக்கு நீதி கோரி போராட்டம்!! (படங்கள்)

0

மாதகல் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த மீனவருக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மாதகல் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாதகல் கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி இரவு கடற்தொழிலுக்கு சென்ற மீனவரின் படகு விபத்துக்கு உள்ளான நிலையில் சக மீனவர்களினால் மீட்கப்பட்ட நிலையில் , மீனவரும் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

சம்பவத்தில் மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த திலீபன் என அழைக்கப்படும் எட்வெர்ட் மரியசீலன் (வயது-31) என்ற மீனவர் உயிரிழந்திருந்தார்.

குறித்த படகு விபத்தானது , கடற்படையின் படகு மோதியதாலே ஏற்பட்டது என உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டிய நிலையில் , கடற்படையினர் தமது படகு மோதவில்லை என மறுத்தத்துடன் , இந்திய றோலர் படகு மோதி இருக்கலாம் என தெரிவித்து இருந்தனர்.

இந்திய றோலர் படகுகள் கரையை அண்மித்து வர முடியாது எனவும் , படகு விபத்து ஏற்பட்ட பகுதிக்கு றோலர் படகுகள் வருவதற்கான சாத்தியமே இல்லை என உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலையே மீனவரின் உயிரிழப்புக்கு நீதி கோரி ஊரவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை உயிரிழந்த மீனவரின் இறுதி கிரிகைகள் இன்றைய தினம் மாதகலில் நடைபெற்று , உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.