வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை விரைவில் மேம்படுத்தப்படும்!!
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற “சுற்றுலாவுக்கு அனுமதி“ என்ற தொனிப்பொருளிலான ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, இந்த ஊடகச் சந்திப்பை வழிநடத்தினார்.
இதன்போது தொடர்ந்துரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆரச்சி, சுற்றுலாத் துறையின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கு உலகளாவிய கொவிட் தொற்றுப் பரவல் ஒரு முக்கிய காரணியாக மாறியிருக்கின்றது என்றும் இது, சுற்றுலாத்துறையில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை இழக்கச்செய்யும் அளவுக்கு பலமிக்கதாக இருந்தது என்றும், அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்குக் கிடைத்துவந்த பாரிய நிதியை நாடு இழந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
“நாட்டுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கும் பிரதான மூல காரணிகளில் சுற்றுலாத்துறை மூன்றாவது இடத்தில் காணப்பட்டது. ஏனைய நிதி மூலங்களுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாத்துறையில் இருந்தே நாட்டுக்கு நிகர வருமானம் கிடைத்தது. தற்போதைய சூழ்நிலையை முகாமைத்துவத்துக்கு உட்படுத்தி, சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள அரச, அரச சார்பற்ற மற்றும் வெளிநாட்டுத் தூதுவர் சேவைகளைத் தொடர்புபடுத்தி, நேர்மறையான அணுகுமுறையுடன் பொதுவான இலக்கை நோக்கிச் செயற்பட வேண்டியதன் அவசியம் இனங்காணப்பட்டுள்ளது.
“புதிய திட்டங்கள் மற்றும் உத்திகளின்படி, 2030ஆம் ஆண்டளவில் நாடு 07 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கவுள்ளதுடன், அதன் மூலம் தமது அமைச்சு பத்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது” எனவும் அவர் கூறினார்.
“இலங்கை தனது இலக்கை அடைய, உலகளாவிய தரநிலைகள் மற்றும் அளவுகோல்களைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அனைத்து மக்களும் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.
என்றும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்ணான்டோ தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தினது வேலைத்திட்டங்களின் கீழ், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இதுவரை இருக்காத பல புதிய நிறுவனங்களை இணைத்துச் செயற்படும் நிறுவனங்களாக ஒன்றுசேர்த்து இருப்பதும், சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நேரடியாகப் பங்களித்துள்ளது.
இலங்கையானது, கொவிட் தொற்றுப் பரவலை விஞ்ஞான ரீதியாக முகாமை செய்து வருவதோடு, ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கையில் அதிகரித்துள்ளதைக் கண்டுகொள்ள முடியும். எதிர்பார்த்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையானது திட்டமிட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்றும் அதன் தலைவர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், இலங்கையின் இயற்கை மற்றும் மனித வளங்களின் கலாசாரத் திறன்கள் மற்றும் விஞ்ஞான ரீதியில் ஆற்றல்களை ஊக்குவிக்கவும் அதன் மூலம் விரைவாகச் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்வதே பிரதான நோக்கமாகும்.
வீடுகள் சார்ந்த மற்றும் நடுத்தர அளவிலான அனைத்துச் சுற்றுலாத் தொழில் முயற்சியாளர்களுக்கும், முறையான பயிற்சி தேவையாக உள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியின் ஊடாகத் தரமான சேவையை வழங்கக்கூடிய வகையில் சேவையைத் தரப்படுத்தப்பட்ட நிலைக்குக் கொண்டுசெல்ல எதிர்பார்ப்பதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார்.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதி மற்றும் முகாமைத்துவத்தை உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்குத் தேவையான நவீன மென்பொருளை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸாரால் நடத்தப்படும் சுற்றுலா பொலிஸ் சேவையைப் புதிய வடிவில் மேற்கொள்வதற்காக அதன் பிரிவுகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சுடன் இணைந்த ஏனைய நிறுவனங்களை நிர்வகிப்பதில் அரசாங்கத்துக்குச் சுமையாக மாறாமல், அந்த நிறுவனங்கள் தமக்குத் தேவையான நிதியைத் தாமாகப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தலே இதன் நோக்கமாகும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதோடு, அதற்கு அனுமதி அளிப்பதற்கான அடிப்படைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொவிட் தொற்றுப் பரவலினால் ஹோட்டல் துறையில் ஈடுபட்டிருந்த அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்டதன் காரணத்தால், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகப் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், அதற்கு முன்னர் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருந்த பலர் அத்துறையில் இருந்து வெளியேறியுள்ளனர். இது ஒரு சவாலாகும்.
அந்தச் சவாலை முறியடிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை இத்துறைக்கு ஈர்ப்பதற்கும், இதற்கு முன்னர் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் முறையான தொழிற்பயிற்சி அளித்து, தொழிற்றிறன் மற்றும் அங்கீகாரத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
கொவிட் தொற்றுப் பரவல் இருக்கும் வரை, இருபது வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டின் சுற்றுலாத் துறையில் பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரிய நடைமுறைகளை, உலகளாவிய புதுமைப்படுத்தல் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதானது, சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய உதவக்கூடிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
இலங்கையின் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை தொடர்பாகச் சர்வதேசத்தில் நிலவுகின்ற நன்மதிப்பை இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது காலத்துக்குப் பொருத்தமானதாகும். இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.