எமது கட்சிக்கு முன்னுரிமை அளிப்பதை பங்காளிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் – சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!!
எமது பங்காளிக் கட்சிகளை நாங்கள் பாராட்ட வேண்டும்.எமது கட்சிக்கு முன்னுரிமை அளிப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவது இலகுவாக உள்ளதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயற் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர்
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த
போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் பதிவின் பின்னர் இன்று முதலாவது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மக்கள் பொருளாதார ரீதியாகப் பலம் இழந்து காணப்படுகின்றார்கள். இந்த நிலையில் நாங்கள் எந்த அளவுக்கு கட்சி என்ற ரீதியில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாக பேசியுள்ளோம்.அந்த வகையில் வீட்டுத்தோட்டம் காளான் வளர்ப்பு பற்றி ஆராய்ந்தோம். எங்களால் முடிந்த புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய முடியும் என்று பேசியுள்ளோம்.
தவழ்ந்துவிட்டு தற்பொழுது எழுந்து நிற்கும் கட்சியாக நாங்கள் இருக்கின்றோம்.அடிமட்டத்தில் மக்களின் ஆதரவை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அடிமட்டத்தில் மக்களிடம் வேலை செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.அதேவேளை தலைவர்கள் மூத்தவர்களின் அனுபவங்களும் அறிவும் அரசியல் ஞானமும் இளைஞர்களின் வீரியமும் சேர்ந்து எமது கட்சியைக் கொண்டு நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.கொரோனா, நாடாளுமன்ற நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் எமது கட்சியின் செயற்பாடுகள் குறைந்தளவிலேயே நடந்திருந்தது.
வேகமாக கட்சியின் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
இதுவரை காலமும் நாங்கள் கூட்டணி என்ற வகையிலே ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டோம்.என்னுடைய கருத்து என்னவென்றால் ஒவ்வொரு பங்காளிக் கட்சியும் தம்மை பலப்படுத்த வேண்டும். பின்னர் தேர்தல் காலத்தில் எல்லோரும் சேர்ந்து பொதுச் சின்னத்தில் முன்னிறுத்தி முகம்
கொடுக்கவேண்டும்.
எமது பங்காளிக் கட்சிகளை நாங்கள் பாராட்ட வேண்டும்.எமது கட்சிக்கு முன்னுரிமை அளிப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவது இலகுவாக உள்ளது என்றார்.
தமிழ் கட்சிகள் பொதுவாக
கூட்டிணைந்து போட்டியிடுவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது,
வஞ்சகம் இல்லாத நிலையில் ஒவ்வொரு கட்சியும் முன்வந்தால் இணைந்து செயற்படலாம். உள்ளே ஒரு காரணத்தை வைத்து கொண்டு சேர்ந்து செல்வோம் என்று கூறிக்கொண்டு இறுதி நேரத்தில் வெளியில் தள்ளுவதை ஏற்கமுடியாது. எல்லோரும் சேர்ந்து செயற்பட முடியும் என்றால் அதனை நான் வரவேற்கின்றேன். ஆனால் அதற்கு பல சிக்கல்கள் இருக்கின்றன
என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”