பூஸ்டர் தடுப்பூசி – ஓமிக்ரோனுக்கு பாதுகாப்பு?
இலங்கை மக்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது என்று தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
இதுவரையும் நாம் பெற்றுள்ள கொவிட் தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்புச் சக்தி படிப்படியாக குறைந்து விடும். எனவே அந்த நோய் எதிர்ப்பு சக்தியை மென்மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது மிக முக்கியம். இதனூடாக ஒமிக்ரோன் தொற்று மற்றும் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தடுப்பூசித் திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் பலருக்கு இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருந்த போதிலும், கடந்த இரு வாரங்களாக மீண்டும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் ஓமிக்ரோன் திரிபு பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இது விரைவாக பரவக்கூடியது. இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், இந்நோய் அதிகளவான மக்களுக்கிடையே பரவி வருகின்து. அதனால் இலங்கை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனூடாக இந்த நேரத்தில் மற்றொரு அலை உருவாக சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தடுப்பதற்கு முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாதது. கைகளை கழுவுதல், முறையான முகக் கவசம் அணிதல் மற்றும் தேவையில்லாமல் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்த்தல் ஆகியன முக்கியமானவை என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் போது மக்களிடையே காணப்பட்ட ஆர்வம் பூஸ்டர் டோஸைப் பெற்றுக்கொள்வதில் இல்லை.
தடுப்பூசி பெற்றுக் கொள்வதன் மூலம் வெவ்வேறு நோய்கள் உருவாகக் கூடும் என்ற இன்று சமூகத்தில் வதந்திகள் பரவுகின்றன. அவற்றை நம்பி ஏமாந்து விடாது பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை மேலும் வலியுறுத்தியுள்ளார்.