;
Athirady Tamil News

பட்டிப் பொங்கலில் கோமாதா வதைக்கு எதிராக தீர்மானம்!!

0

மிருகவதை செய்யப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பட்டிப் பொங்கல் தினத்தில் கோமாதா உற்சவம் – 2022 இல் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பட்டிப் பொங்கல் தினமான இன்று(15) யாழ்பாணம் சத்திரம் அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – “என்னைப் பொறுத்தவரையில் மிருகவதை முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக எனது நிலைப்பாடடினை வெளிப்படுத்தி வருகின்றேன்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் தமிழர் தரப்புக்கள் சில அரசியல் நோக்கங்களுக்காக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டன.

எனினும், மிருகங்கள் சித்திரவதை செய்யப்படக்கூடாது என்பதில் நான் உறுதியான கருத்தினையே அன்றும் வெளியிட்டிருந்தேன். இந்நிலையிலேயே பசு மற்றும் இடப வதைக்கு எதிரான சட்டத்தினை கொண்டு வருவதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆர்வம் செலுத்தி வருகின்றார்.

அத்துடன் அந்த நிலைப்பாட்டிலேயே தற்போதைய அரசாங்கமும் இருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய உங்களின் தீர்மானம் அமைந்திருக்கின்றது.

உங்களின் எதிர்பார்ப்புக்களை அடுத்த அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, குறித்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்துவேன்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன்போது, பசு மற்றும் இடப வதையைக் கட்டுப்படுத்துவதற்காகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கான நினைவுச் சின்னம் ஒன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.