Water Cress!! (மருத்துவம்)
நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் ஹிப்போகிரேட்ஸ். இவர் கி.மு 400-ம் ஆண்டில் க்ரீஸ் நாட்டின் கோஸ் தீவில் முதல் மருத்துவமனையை நிறுவினார். அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த தீவில் வாட்டர் கிரஸ்(Water cress) என்ற மூலிகைகள் நிறைந்து காணப்பட்டதே என்று வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன. இந்த வாட்டர் கிரஸின் அருமைகள் தற்போது வெளி உலகுக்குத் தெரிய வந்திருப்பதால் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. வாட்டர் கிரஸில் அப்படி என்ன விசேஷம்?!
‘வாட்டர் கிரஸ் நீர் நிலைகளில் எளிதாகவும், அதிகமாகவும் மண்டி வளரும் ஒரு கீரை வகை ஆகும். இது காமன் க்ரெஸ் மற்றும் கார்டன் க்ரெஸ் என்றும் அழைக்கப்படுகிறது. வாட்டர் கிரஸ் என்பது முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃப்ளவர், ப்ரோக்கோலி, கடுகு மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் ஆகிய க்ரூஸிஃபிரஸ்(Cruciferous) காய்கறிகளின் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். சுமார் 34 கிராம் கொண்ட ஒரு கப் வாட்டர் கிரஸானது 4 Kcal என்கிற அளவில் மட்டுமே கலோரிகளைத் தருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 0.03 கிராம் கொழுப்பு, 0.78 கிராம் புரதம் மற்றும் 0.44 கிராம் கார்போஹைட்ரேட்டையும் வழங்குகிறது.
வாட்டர் கிரஸில் பலவிதமான ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான(Anticancer) குணங்களை உடைய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளது. க்ரூஸிஃபிரஸ் காய்கறிகளை அதிகமாக உண்பவர்கள் இடையே புற்றுநோய் குறைவாக வருவதாக ஆராய்ச்சி முடிவுகள்
உறுதிப்படுத்தியிருக்கின்றன. தங்கள் உணவில் போதுமான பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் தாதுக்களை உட்கொள்ளாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாதுக்களை சத்து மருந்து, மாத்திரை வடிவத்தில் எடுத்துக்கொள்வதை விட ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக உண்பதே நல்ல பலனை அளிக்கும்.
இந்த மூன்று தாதுக்களையும் வாட்டர் கிரஸ் கொண்டுள்ளதால் நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க உதவுகிறது.
புகைபிடிப்பவர்கள் வாட்டர் கிரஸை சாறாக எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோய் செல்கள் உருவாகி, வளர்வதைத் தடுக்கிறது. வாட்டர் கிரஸ் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கவும் உதவுகிறது. இதனை சமைக்காமல் பச்சையாக உட்கொள்ளும்போது(கொத்தமல்லி தழையை உபயோகப்படுத்துவதுபோல்) அதிக நன்மையைத் தருகிறது. எனவே, அதன் ஊட்டச்சத்து மதிப்பைப் பராமரிக்க வாட்டர் கிரஸை சிறிது நேரம் மட்டுமே வேக வைக்க வேண்டும்.
வாட்டர் கிரஸில் ஆல்பா லிபோயிக் அமிலம்(Alpha lipoic acid) உள்ளது. ஆல்பா லிபோயிக் அமிலம் ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது எடை இழப்பை ஊக்குவிக்கிறது. நீரிழிவு நோயாளிகளில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், இன்சுலினின் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதய நோய் வருவதற்கு காரணமானது LDL என்னும் கெட்ட கொழுப்பு. ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கெட்ட கொழுப்பின் அளவை வாட்டர் கிரஸ் குறைக்க உதவுகிறது. மேலும் வாட்டர் கிரஸில் வைட்டமின் சி உள்ளது. இது இதய திசுக்களின் சேதத்தை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
வாட்டர்கிரஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் ஆஸ்டியோபோரோசிஸ்(Osteoporosis) வரும் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது. கால்சியம், எலும்பு செல்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எலும்புகளை உருவாக்கவும், எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும் மற்றும் சிதைவுகளை சரி செய்யவும்
உதவுகிறது.
வாட்டர் கிரஸில் உள்ள டயட்டரி நைட்ரேட்டுகள் தடகள செயல்திறனை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்தத்தில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடின் அளவையும் அதிகரிக்கின்றன. இது உடற்பயிற்சியின் செயல்திறனை மேம்படுத்தக்கூடும். வைட்டமின் சி நிறைந்த உணவை உட்கொள்வது ஜலதோஷம் வரும் வாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வாட்டர் கிரஸ் வைட்டமின் சி-யின் ஒரு சிறந்த மூலமாகும், இது சளி, ஜலதோஷம் பிடிக்கும் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.
வாட்டர் கிரஸ் பெரும்பாலும் சூப், சாலட், ஸ்மூத்திகளில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும் நமது பாரம்பரிய உணவு வகைகளான கூட்டு, கடைசல், கீரை வடை ஆகியவற்றில் உபயோகப்படுத்தலாம். அதன் மென்மையான தன்மை காரணமாக எளிதில் வதங்கக்கூடியது. வாட்டர் கிரஸ் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும். வாங்கும்போது அடர் பச்சை, மிருதுவான இலைகள் மற்றும் வாடாத வாட்டர் கிரஸைத் தேர்வு செய்ய வேண்டும். வாங்கியதும் சேற்று மண் நீங்குமாறு நன்கு கழுவ வேண்டும். குளிர்சாதன பெட்டியில் சேமித்து, சில நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். வாட்டர் கிரஸ், எல்லோருக்குக்கும் தெரிந்த ஒரு பிரபலமான காய்கறிகளில் ஒன்றாக இன்னும் மாறவில்லை என்றாலும் எல்லோரும் தெரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டிய ஓர் உணவுப்பொருளாக இருக்கிறது.