இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்- துபாய் விமான நிலையத்தில் பரபரப்பு…!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்து, பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
துபாயில் கடந்த ஜனவரி 9-ம் தேதி இரவு, 5 நிமிட இடைவெளியில் இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்களுக்கு ஒரே ஓடு பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. விமானங்கள் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விஷயத்தை அறிந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக ஒரு விமானத்தின் பயணத்தை நிறுத்துமாறு அறிவித்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர்.
துபாய் விமான நிலையம்
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
அரபு எமிரேட்ஸ் நிறுவனத்தின் இ.கே-524 என்ற விமானம் இரவு 9.45 மணிக்கு ஐதராபாத்துக்கு புறப்பட தயாராக இருந்தது. அதே நிறுவனத்தின் மற்றொரு விமானமான இ.கே-568, 5 நிமிட இடைவெளியில் பெங்களுருக்கு புறப்பட இருந்தது.
துபாய் – ஹைதராபாத் விமானம் புறப்படுவதற்காக அறிவித்தவுடன், மிக வேகமாக 30 ஆர் என்ற ஓடுபாதைக்கு சென்றது. அப்போது, அந்த ஓடுபாதையில் பெங்களுருவுக்கு செல்ல இருந்த விமானமும் இருந்துள்ளது. இரு விமானங்களும் மோதியிருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் இதை அறிந்த அதிகாரிகள், உடனடியாக ஐதராபாத் விமானத்தின் டேக்ஆப்-ஐ நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, அந்த விமானம் வேறு பாதைக்கு சென்று நிறுத்தப்பட்டது. அதிகாரிகளின் தக்க சமயத்தில் எடுத்த நடவடிக்கையால் மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் தப்பித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.