சொந்த படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்: ஏன் தெரியுமா? – அமெரிக்கா குற்றச்சாட்டு…!!
உக்ரைன் மீது படையெடுப்பதற்காக தன் சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்தது. இந்த பிரச்சனையில் உக்ரைனுக்கு அமெரிக்கா தன் முழு ஆதரவையும் அளித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களுடன் 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்ய அதிபர் புதின்
இதனால், உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு நோட்டோ ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போர் உத்தியாக, உக்ரைன் மீது படையெடுப்பதற்காக சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டுள்ளதாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டு எல்லையில் அமைந்துள்ள மால்டோவா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு படையினர் மீது, ரஷ்ய சிறப்பு படையினர் தாக்குதல் நடத்த உள்ளனர். இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியது என பழிசுமத்தி அந்நாட்டு மீது ரஷ்யா படையெடுக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குற்றச்சாட்டை ரஷ்யா முழுவதும் மறுத்துள்ளது. இரு நாடுகளுக்குள் பிரச்சனையை உண்டாக்கும் அரசியலை அமெரிக்கா செய்து வருவதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.