ஜப்பானில் சுனாமி அலை உருவானதா? – பொது மக்களுக்கு வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை….!!
ஜப்பானில் சனிக்கிழமை பிற்பகுதியில் இருந்து இன்று அதிகாலை வரை மூன்று மீட்டர் உயரம் கடல் அலைகள் எழுந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் அது சுனாமி அலைகளா என்பது உறுதிபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோங்கா அருகே ஒரு பெரிய எரிமலை வெடிப்புக்குப் பிறகு, ஜப்பானின் பசிபிக் கடற்கரை பகுதியில் நான்கு அடி உயர கடல் அலைகள் எழுந்து தெற்கு தீவான அமாமி ஓஷிமாவை அடைந்ததாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு ஹொக்கைடோ தீவின் கிழக்குக் கரைகள் மற்றும் வாகயாமாவின் தென்மேற்குப் பகுதிகளும் நள்ளிரவுக்குப் பிறகு கடல் அலை உயர்ந்து காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து அப்பகுதி குடியிருப்பாளர்களை பாதுகாப்பான பகுதிக்கு காலி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அது சுனாமி தாக்குதல் என்று வகைப்படுத்தப்படவில்லை. இருப்பினும், அமாமி குடியிருப்பாளர்களை வெளியேற்ற வலியுறுத்த பொது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வானிலை மைய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.