இரண்டு நாட்களில் கங்கை நதியில் 10.5 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்…!!
பொங்கல் பண்டிகை வட மாநிலங்களில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை சூரிய உதயம் சங்கராந்தியின் நல்ல நேரம் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் குவிந்தனர். அங்குள்ள கங்கை நதி மற்றும் சங்கமம் நதி பகுதிகளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.
வெள்ளிக்கிழமையும் சுமார் 6.5 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதால், கங்கையில் நீராடியவர்களின் எண்ணிக்கை 10.5 லட்சமாக உயர்ந்துள்ளது. கடும் குளிர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கங்கை நதிக்கரைக்கு வருகை தந்ததாக பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் நெரிசலைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ரயில்வே மற்றும் உத்தரப்பிரதேச சாலை போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கொரோனாவை தடுக்க பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படியும், முக கவசம் அணியவும் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும், பலர் விதிமுறைகளை மீறியதாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 1,25,000 முக கவசங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. 25 கொரோனா தடுப்பு உதவி மையங்கள் மூலம், பக்தர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.