தமக்காக பொது போக்குவரத்தை நிறுத்தக் கூடாது – காவல்துறை அதிகாரிக்கு அசாம் முதலமைச்சர் அறிவுரை…!!
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, நாகோன் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வாகனத்தில் பயணம் செய்தார். அவரது வாகனத்திற்கு முன்னால் முதலமைச்சருக்கான பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. இதையடுத்த அந்த பகுதியில் பொதுக் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் காத்திருந்தன.
இது குறித்து அறிந்த முதலமைச்சர் பிஸ்வாஸ், அங்கு பணியில் இருந்த நாகோன் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் நிசார்க் ஹிவாரேவை அழைத்தார். எதற்காக இதை செய்தீர்கள், யாராவது ராஜா வருகிறாரா என்று கேள்வி எழுப்பினார். மக்கள் கஷ்டபடுகிறார்கள், எதிர்காலத்தில் இது போன்று செய்யக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் தொடர்ந்து அங்கிருந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களிடம் உங்கள் பயணத்தை தொடருங்கள் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சத்தமாக அறிவித்தார்.
பொதுவெளியில் அவர் பேசியது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த சம்பவத்திற்கு பின் தொடர்ந்து பேசிய அவர், அசாம் மாநிலத்தில் எந்தவொரு அரசு ஊழியர் அல்லது மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற கலாச்சாரத்தை உருவாக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.