எல்லை பதற்றத்துக்கு இடையிலும் சீனா – இந்தியா இடையே 125 பில்லியன் டாலர் வர்த்தகம்…!!
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
இதனால் அங்கு இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளைக் குவித்து கண்காணிப்புப் பணிகளை பலப்படுத்தின. எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து நிலவ வந்த நிலையில், அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிழக்கு லடாக் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்தாலும் இந்தியா, சீனா இடையே கடந்த ஆண்டு 125 பில்லியன் டாலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக சீனாவில் இருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு:
2021-ம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையே 125.66 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 43 சதவீதம் அதிகம்.
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஏற்றுமதி 97 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டைவிட46 சதவீதம் அதிகம்.
இதேபோல், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஏற்றுமதி 28 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 34 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவப் பொருள்கள் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
இதனாலேயே இந்தியா மற்றும் சீனா இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என தெரிவித்துள்ளது.