;
Athirady Tamil News

செட்டிகுளத்தில் தனி நபர்களால் காடுகள் அழிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளை காணியற்ற மக்களுக்கு வழங்க நடவடிக்கை: திலீபன் எம்.பி!!

0

செட்டிகுளத்தில் பிரதேச செயலாளரின் துணையுடன் தனி நபர்களால் காடுகள் அழிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளை காணியற்ற மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (17.01) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் சோளச் செய்கையாளர்கள் மிகவும் குறைவு. இருந்தாலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து விவசாய அமைச்சருடன் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேச இருக்கின்றோம். அதனடிப்படையில் சோளச் செய்கையாளர்களுக்குரிய அரச சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

மேலும், வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் கடமையேற்ற காலப்பகுதியில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆவணங்கள் இன்றி பல காணிகள் காடுகள் அழிக்கப்பட்டு சில நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு காணிகள் வழங்குவதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் தனிநபரின் காடழிப்பு மற்றும் நில அபகரிப்புக்கு இடமளிக்க முடியாது. இந்த விடயம் தொடர்பில் நான் பார்வையிட்டேன். பிரதேச செயலாளரின் 2 ஹெக்ரேயர் கடிதத்தை வைத்துக் கொண்டு இரண்டு நபர்கள் 100 ஏக்கருக்கு மேல் காடுகளை அழித்து காணிகளை அபகரித்துள்ளனர்.

இக் காணிகளை கையகப்படுத்தி காணி அற்ற மக்களுக்கு வழங்குமாறு நான் மாவட்ட அரச அதிபருக்கு தெரிவித்திருகின்றேன். அவர்கள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள். நிச்சயமாக நல்ல முடிவு கிடைக்கும்.

சீனாவிடம் கடன் வாங்கும் விடயம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் அரசாங்கம் செய்ய மாட்டாது எனவும் தெரிவிக்கின்றேன் எனக் கூறினார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.