முகநூல் மூலம் பழக்கம்- ஆண் வேடமணிந்து சிறுமியை கடத்திய பெண் கைது…!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீரன்னபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. சந்தியா முகநூல் (பேஸ்புக்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில் முகநூலில் ஆண் ஒருவரின் பெயரில் போலியாக ஐ.டி. உருவாக்கினார்.
பின்னர் முகநூலில் 15 வயது சிறுமியுடன் சந்தியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியும் சந்தியாவை வாலிபர் என்று நினைத்து பேசி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து சந்தியா, அந்த சிறுமியிடம் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு வாலிபர் குரலில் பேசி உள்ளார். மேலும் அந்த சிறுமியை காதலிப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.
சம்பவத்தன்று சந்தியா, அந்த சிறுமியை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்தார். பின்னர் அவரை கடத்திச்சென்றுவிட்டார். சிறுமியை காணாததை பற்றி அறிந்ததும் பெற்றோர் இதுபற்றி மாவேலிக்கரா போலீ்ஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள்.
சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன், சிறுமியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அந்த செல்போன் டவர் திருச்சூர் பகுதியை காண்பித்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டதுடன், அவருடன் இருந்தவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சந்தியா என்பதும், முகநூலில் ஆண் போல் வேடமணிந்து சிறுமியுடன் பழகியதோடு, ஓரினச்சேர்க்கைக்கு ஆசைப்பட்டு அவரை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டில் இருந்த சிறுமியை கடத்திச்சென்ற சந்தியா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைதான சந்தியா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.