குடியரசு தினவிழாவையொட்டி பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்- டெல்லியில் 3 அடுக்கு உயர் பாதுகாப்பு…!!
டெல்லியில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குடியரசு தினவிழாவையொட்டி பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து டெல்லி மிக உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுடெல்லி போலீஸ் துணை கமிஷனர் தீபக் யாதவ் கூறியதாவது:-
டெல்லியில் குடியரசு தினவிழா நடைபெறும் பகுதி முழுவதும் முக அடையாளத்தை காண்பிக்கும் மென்பொருளுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர், உள்ளூர் போலீசார், சிறப்பு பிரிவு போலீசார், தனிப்பிரிவு போலீசார், போக்குவரத்து பிரிவு போலீசார், ஆயுதப்பிரிவு போலீசார் மற்றும் ஸ்வாட் பிரிவு, தேசிய பாதுகாப்புப் படை குழுவினர் உள்பட டெல்லி காவல் துறையின் அனைத்து பிரிவுகளும் ஈடுபடுத்தப்படும்.
இரண்டு இடங்களில் டிரோன் கருவி தடுப்பு ஏற்பாடு அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன. உயரமான கட்டிடங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். எதிரிகளின் விமானத்தை கண்காணிப்பதற்கும், சமாளிப்பதற்கும் வான் பாதுகாப்பு பீரங்கி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேமரா பொருத்தப்பட்ட வேன்களில் ரோந்து படையினரும் சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு பணி தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி தற்போது 3 அடுக்கு உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாத நாசவேலை தடுப்பு நடவடிக்கைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சமீபத்தில் பஞ்சாப்பில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை கருத்தில் கொண்டு டெல்லியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய கூடுதல் விழிப்புடன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குடியரசு தின விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் ஆளில்லாத விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்ப காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் ஆகியவை வருகிற 20-ந்தேதி முதல் பிப்ரவரி 15-ந் தேதி வரை வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.