திகார் சிறையில் சோதனையின்போது செல்போனை விழுங்கிய கைதி..!!
டெல்லி திகார் சிறைச்சாலையில் பாதுகாப்பு கருதி கைதிகளிடம் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது, கைதிகள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமாக ஏதாவது ஆயுதங்கள் வைத்திருந்தாலோ, செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருந்தாலோ பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கைதி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அவ்வகையில், கடந்த 5ம் தேதி அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, 29 வயது மதிக்கத்தக்க ஒரு கைதி, பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் தான் வைத்திருந்த செல்போனை விழுங்கி உள்ளார். இதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அந்த கைதியை தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜி.பி.பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் வயிற்றுக்குள் செல்போன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து எண்டோஸ்கோபி மூலம் அந்த செல்போன் வாய் வழியாக எடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு அந்த கைதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
கைதிகள் செல்போனை விழுங்குவது இது 10வது முறை என, எண்டோஸ்கோபி செய்து செல்போனை வெளியே எடுத்த டாக்டர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.