கொரோனா இப்போது முடிவுக்கு வராது: உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்…!!
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பெருந்தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது. ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளது.
ஒமைக்ரான் வேண்டுமானால் தீவிரம் குறைந்ததாக இருக்கலாம். ஆனால் இது லேசான நோய் என்று சொல்வது தவறாக வழிநடத்துகிறது. ஒமைக்ரானும் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கைக்கு காரணமாகிறது. உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் இன்னும் தீவிரமாக பரவி வருகிறது. பலர் இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலக பொருளாதார மன்றத்தில் அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி பேசினார்.
அப்போது அவர், “கொரோனா தொற்றின் முதல் கட்டத்தில் உலகம் இன்னும் உள்ளது. உலகம் முழுவதும் உண்மையில் மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, “ஒமைக்ரான் தொற்றை பொறுத்தமட்டில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியில் ஒரு அர்த்தமுள்ள விளைவை ஏற்படுத்த முடியும். ஒமைக்ரான் கொரோனாவுக்கான நேரடி தடுப்பூசியாக இருக்கப்போகிறதா என்றால் இது ஒரு திறந்த கேள்வி. ஏனென்றால் புதிய உருமாற்றங்கள் வெளிவருகின்றன” எனவும் கூறினார்.
எனவே “கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பதை இப்போதே கணித்து கூறி விட முடியாது” என்று குறிப்பிட்டார்.