அரிய வகை எகிப்திய கழுகுகளை ரயில் மூலம் கடத்தியவர் கைது…!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பயணம் மேற்கொண்ட சுல்தான்பூர்-மும்பை விரைவு ரயிலின் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் துர்நாற்றம் வீசுவதாகவும் பறவைகளின் சத்தம் கேட்பதாகவும் அதில் பயணம் செய்த பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார் அளித்தனர்.
இதையடுத்து ரயில்வே போலீசார் மற்றும் மாநில வனத் துறை கூட்டுக் குழு அந்த ரயில் பெட்டியில் தீவிர சோதனை நடத்தியது. அப்போது அங்கு பிளாஸ்டிக் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த அழிந்து வரும் அறிய வகை பறவை இனத்தைச் சேர்ந்த ஏழு எகிப்திய கழுகுகள் இருப்பதை கண்ட அந்த குழு அவற்றை பறிமுதல் செய்தது.
அந்த பறவைகளை கடத்தியதாக அந்த ரயிலில் பயணம் செய்த உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவரையும் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் காவல்நிலையத்தில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பறவை கடத்தலில் ஈடுபட்டவர் பெயர் ஃபரீத் ஷேக் என்பதும், கான்பூர் நகரைச் சேர்ந்த சமீர்கான் என்பவரால் இந்த கழுகுகள் கொடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
மாலேகானுக்கு கொண்டு சென்று ஹாசிம் என்பவரிடம் கழுகுகளை ஒப்படைக்க ஃபரீத் ஷேக் 10 ஆயிரம் பணம் பெற்றிருப்பதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டதாக கந்த்வா மூத்த வனத்துறை அதிகாரி அனில் சுக்லா தெரிவித்துள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. ஆபூர்வ வகை கழுகுகள் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.