அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா மீண்டும் விமானங்களை இயக்கியது…!!
வடஅமெரிக்காவில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் உருவானது.
அதாவது, விமானத்தில் உள்ள ‘ரேடியோ உயரமானி’ என்ற கருவியின் செயல்பாட்டை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதால், விமானம் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும், ஓடுதளத்தில் நிறுத்துவதிலும் சிக்கல் உண்டாகும் என்று கருதப்பட்டது.
இதனால், இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், டெல்லியில் இருந்து அமெரிக்காவின் 3 நகரங்களுக்கும், மும்பையில் இருந்து ஒரு அமெரிக்க நகரத்துக்கும் தனது விமானங்களை நேற்று முன்தினம் திடீரென ரத்து செய்தது. இதுபோல், எமிரேட் ஏர்லைன்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்களும் அமெரிக்காவுக்கான விமானங்களை ரத்து செய்தன.
இந்தநிலையில், நேற்று இப்பிரச்சினையில் திருப்பம் ஏற்பட்டது. ரேடியோ உயரமானி தயாரிப்பு நிறுவனங்கள், இதுதொடர்பான தகவல்களை ஆய்வு செய்தன. 5 வகையான ரேடியோ உயரமானிகள், 5ஜி செல்போன் தொழில்நுட்ப சிக்னலால் பாதிக்கப்படாது என்று தெரிவித்தன.
அவற்றில், இத்தகைய உயரமானி பொருத்தப்பட்ட போயிங் ரகத்தை சேர்ந்த 6 விமான மாடல்களும் அடங்கும். இத்தகவலை அமெரிக்க சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்தது.
இதுபோல், போயிங் ரக விமான தயாரிப்பு நிறுவனமும், போயிங் பி777 ரக விமானம், இந்த தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படாது என்று பரிந்துரை அளித்தது. அதன்பேரில், அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா நேற்று மீண்டும் விமானங்களை இயக்க தொடங்கியது. காலையில், டெல்லியில் இருந்து நியூயார்க் ஜான் கென்னடி விமான நிலையத்துக்கு ஏர் இந்தியாவின் போயிங் பி777 விமானம் புறப்பட்டு சென்றது.
அத்துடன், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கும், அங்கிருந்து டெல்லிக்கும் போயிங் ரக விமானங்கள் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. விமானம் ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளை முன்னுரிமை கொடுத்து அழைத்து வருவோம் என்று கூறியுள்ளது.