மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மகாத்மா காந்தி பெயர்- மொரிசியஸ் பிரதமர் அறிவிப்பு…!!
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரிசியசில், இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள சமூக குடியிருப்புகளை இந்திய பிரதமர் மோடியும், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜெகநாத்தும் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தனர்.
மேலும், சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் 8 மெகாவாட் மின்உற்பத்தி கொண்ட சோலார் திட்டங்களையும் மொரிசியசில் தொடங்கினர். இவை இந்தியாவின் வளர்ச்சி ஆதரவு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர, மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக மொரிசியசுக்கு இந்தியா சார்பில் 190 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் மற்றும் சிறிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவையும் இன்று மேற்கொள்ளப்பட்டது.
மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டத்திற்கு இந்தியாவின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முக்கிய மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு ‘மகாத்மா காந்தி’என பெயர் சூட்டப்படும் என மொரிசியஸ் பிரதமர் அறிவித்துள்ளார்.