பாட்டலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?
ராஜகிரிய விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை பெப்ரவரி 18 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவருக்கு பாரிய வாகன விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் உரிய சாட்சியங்களை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த தினம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் இதன்போது நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, கடந்த 11ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக வைத்திய அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம், அதனை வெளியிட்ட வைத்தியரிடம் வாக்குமூலம் பெறுமாறு குற்றப் பிரிவினருக்கு உத்தரவிட்டதை நினைவுகூர்ந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சம்பிக்க ரணவக்கவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.