இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சிலை – பிரதமர் அறிவிப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினர் வரவேற்பு…!!!
தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு, மகள் அனிதா போஸ், நேதாஜியின் பேரன்கள் சுகதா போஸ் மற்றும் சந்திர குமார் போஸ் ஆகியோர் பாராட்டி உள்ளனர். ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா கேட் நல்ல இடம். இவ்வளவு முக்கியமான இடத்தில் சிலை வைப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிதான். திடீரென இந்த அறிவிப்பு வந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இதை முன்பே செய்திருக்கலாம். இருப்பினும், தாமதம் என்றாலும் சிறந்த முடிவு. இது ஒரு இனிய நல்லெண்ண நடவடிக்கை. இதன்மூலம், குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்காள அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சிலை நிறுவும் பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன். நன்றி உணர்வுள்ள நாடு, நேதாஜிக்கு அளிக்கும் மரியாதையாக இதை பார்க்க வேண்டும். நேதாஜி சிலை நிறுவுவதால், நாட்டு மக்கள் மனதில் தேசபக்தி, சுயமரியாதை தட்டி எழுப்பப்படும். சுதந்திரத்தை பராமரிக்க எல்லாவற்றையும் தியாகம் செய்யும் உணர்வையும் அளிக்கும். நேதாஜி சிலையை நிறுவுவதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.