ஐம்மு-காஷ்மீரில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை – அமித் ஷா தகவல்…!
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட நல்லாட்சி குறியீடு அறிமுக நிகழ்ச்சியில் காணொலி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:
அனைத்து முதலீடுகளும் சேர்ந்து ஜம்மு-காஷ்மீரில் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீருக்கு இதுவரை இல்லாத வகையில் சிறந்த தொழில் கொள்கையை உருவாக்கியுள்ளார். இதன் கீழ் ஜம்மு-காஷ்மீரில் சுமார் ₹ 50,000 கோடி முதலீடுகள் வரப் போகிறது. ஒரே ஆண்டில் ₹ 12,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ₹ 2,000 கோடி மதிப்பிலான அடிக்கல் நாட்டு விழாக்களும் நடைபெற்றுள்ளன.
எனது இளம் நண்பர்களுக்கு, குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் இளம் நண்பர்களுக்கு, மோடி வகுத்துள்ள வளர்ச்சிப் பாதையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீர் நாட்டின் வளர்ச்சியடைந்த பகுதியாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. வளர்ச்சி, அரசியல் செயல்முறை மற்றும் ஜனநாயக செயல்பாட்டில் காஷ்மீர் இளைஞர்கள் பங்கேற்று எதிர்காலத்தை பிரகாசமாக்க வேண்டும்.
நல்லாட்சியை அடி மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு மாவட்டம் ஒரு முக்கியமான இலக்காகும். மேலும் மாவட்ட அளவில் நல்லாட்சி இல்லாவிட்டால், அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. நல்லாட்சி குறியீடு மூலம் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டி ஜம்மு காஷ்மீர் பொது மக்களுக்கு பெரும் பயனளிக்கும். இவ்வாறு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.