இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக சரிவு…!!
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக சரிந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 20-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 3.47 லட்சமாக இருந்தது. நேற்று முன்தினம் 3.37 லட்சமாக குறைந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் சரிந்துள்ளது.
அதேநேரம் தினசரி பாதிப்பு விகிதம் 17.22 சதவீதத்தில் இருந்து 17.78 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 16.65 சதவீதத்தில் இருந்து 16.87 சதவீதம் ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 92 லட்சத்து 37 ஆயிரத்து 264 ஆக உயர்ந்தது.
மகாராஷ்டிராவில் 46,393, கேரளாவில் 45,136, கர்நாடகாவில் 42,470 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.
தமிழ்நாட்டில் 30,744, குஜராத்தில் 23,150, உத்தரபிரதேசத்தில் 16,549, ராஜஸ்தானில் 14,829, டெல்லியில் 11,486, மத்திய பிரதேசத்தில் 11,274 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கு மேல் உள்ள நிலையிலும், தலைநகர் மும்பையில் புதிய பாதிப்புகள் 3,568 ஆக சரிந்துள்ளது.
இதே போல டெல்லியில் தினசரி பாதிப்பு 11,486 ஆகவும், சென்னையில் 6,452 ஆகவும், கொல்கத்தாவில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழும் குறைந்துள்ளது. இந்த 4 பெரிய நகரங்களிலும் கடந்த ஒரு வாரத்தில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து சரிந்து வருவதால் இங்கு 3-வது அலை உச்சத்தை எட்டியிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதே நேரம் பெங்களூரு, புனே, அகமதாபாத் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. பெங்களூருவில் கடந்த வாரம் 30 ஆயிரத்தில் இருந்த தினசரி பாதிப்பு நேற்று 17,266 ஆக குறைந்துள்ளது.
அகமதாபாத்திலும் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. எனவே மேற்கண்ட 4 நகரங்களிலும் தற்போது 3-வது அலையின் வேகம் உச்சத்தில் இருக்கலாம் எனவும், இன்னும் ஓரிரு நாட்களில் உச்சத்தை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் மேலும் 525 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 132 பேர் அடங்குவர்.
இதுதவிர மகாராஷ்டிராவில் 48, டெல்லியில் 45, தமிழ்நாட்டில் 33, மேற்கு வங்கத்தில் 37, பஞ்சாபில் 35, கர்நாடகாவில் 26 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,89,409 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 2,59,168 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 65 லட்சத்து 60 ஆயிரத்து 650 ஆக உயர்ந்தது.
கோப்புப்படம்
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,87,205 ஆக உயர்ந்தது. இது நேற்று முன்தினத்தைவிட 73,840 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 161 கோடியே 92 லட்சத்தை கடந்துள்ளது.
இதில் நேற்று மட்டும் 71,10,445 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று 18,75,533 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 71.55 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.