மின்சாரத் துண்டிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை !!
மின்சாரத் துண்டிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கையிருப்பில் உள்ள எரிபொருளின் அளவை அடிப்படையாகக் கொண்டு நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
போதியளவிலான எரிபொருள் இல்லாமையினால் சபுகஸ்கந்த மின்நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று முற்றாகத் தடைப்பட்டன. இதன் மூலம் தேசிய மின்சாரக் கட்டமைப்பு 108 மெகாவொட் மின்சாரத்தை இழந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
´யுகதனவி´ மின் நிலையத்தில் உள்ள எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களுக்கு மாத்திரம் போதுமானதாகும். தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்குக் கிடைக்க வேண்டிய 183 மெகாவொட் மின்சாரம் கிடைக்காமையினால் மின்சார துண்டிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மின்சாரத் துண்டிப்பு தொடர்பாக நாளை இடம்பெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மின்சார சபை தொடர்பாக போலிக் குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து வருகின்றன. மின்சாரத்தைத் துண்டித்து மக்களையும், அரசாங்கத்தையும் சிரமத்திற்கு உள்ளாக்குவது இந்த தொழிற்சங்கங்களின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.