மனைவி மாற்றும் குழுக்கள் மீதான விசாரணையில் மந்தம்: முக்கிய பிரமுகர்களை தப்ப வைக்க முயற்சி என குற்றச்சாட்டு…!!
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் தனது கணவர் அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க தன்னை வற்புறுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் தன்னை கொடுமை படுத்துவதாகவும் கூறியிருந்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தபெண்ணின் கணவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும்,அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் உல்லாச விடுதிகளில் ஒன்று கூடி மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருப்பதாக கூறினார்.
இதற்காக கேரளாவை மையமாக கொண்டு 20 மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருவதும், இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது.
இதுபற்றிய தகவல்களை தெரிந்து கொண்ட போலீசார், சைபர் கிரைம் நிபுணர்கள் துணையுடன் இக்குழுவின் உறுப்பினர்களை அடையாளம் காணவும், இக்குழுக்களை தொடங்கியவர்களை பிடிக்கவும் முயற்சி மேற்கொண்டனர்.
மேலும் இக்குழுவின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய விபரங்களையும் திரட்டினர். அவர்கள் மூலம் இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் வலைவிரித்தனர்.
அப்போது இக்குழுவில் கேரளா மட்டுமின்றி தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்போரும் முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவிகளும் இதில் உறுப்பினராக இருக்கும் தகவலும் கண்டுபிடிக்கப்பட்டது.
மனைவி மாற்றும் குழுக்கள் ஒன்று கூடி கொண்டாடிய இடங்களும் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான பண்ணை வீடுகள் என்பதையும் போலீசார் தெரிந்து கொண்டனர்.
கோட்டயம் பெண் புகார் கொடுத்த சில நாட்களில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருக்கு துணை புரிந்தவர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு போலீசாரின் விசாரணை வேகமெடுக்க வில்லை.
இதற்கிடையே இந்த குழுவில் இடம்பெற்ற முக்கிய பிரமுகர்கள் சிலர் வெளிநாடு தப்பி சென்று விட்டனர். மேலும் சிலர் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்த வழக்கின் விசாரணை தற்போது மந்தமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரம் போலீசார் கூறும்போது, இக்குழுக்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும் அதன்காரணமாகவே விசாரணை தாமதமாகி வருவதாகவும் கூறியுள்ளனர். இதற்காக பாதிக்கப்பட்ட பெண்களை அணுகி அவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்து அவர்களை புகார் கொடுக்க வைக்க முயற்சி செய்துவருவதாக கூறினர். பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வந்தால், குற்றவாளிகளை கண்டிப்பாக கைது செய்வோம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.