;
Athirady Tamil News

அரசாங்கம் விழ முன் நாடு விழுந்து விட்டது!

0

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இன்று முன் சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது, வழமையாக அரசாங்கங்கள் பதவிக்கு வரும். பின்னர் அது விழும். அதையடுத்து புதிய அரசாங்கம் பதவிக்கு வரும். அதுவும் விழும். இன்னொரு அரசாங்கம் வரும். இதுவே வழமை. ஆனால், இன்று அரசாங்கம் விழுவதற்கு முன் நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது.

ஆகவே, புதிதாக கட்டி எழுப்ப வேண்டியது புதிய அரசாங்கம் என்பதை விட, புதிய நாடு என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே இன்று இந்நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரங்கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், 43ம் படையணி தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்கவும் கரங்கோர்க்க வேண்டும்.

“இல்லை, இல்லை” என்ற கூக்குரலை விட இந்நாட்டில் இன்று எதுவும் இல்லை என்றாகி விட்டது. எண்ணெய் இல்லை. எரிவாயு இல்லை. பால்மா இல்லை. உரம் இல்லை. மருந்துகள் இல்லை. எதுவும் இல்லை. சொல்லப்போனால் இந்நாட்டில் இன்று அரசாங்கமே இல்லை.

உரம் இல்லை என்று கையை விரித்து மன்றாடும் விவசாயிகளிடம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, “உங்கள் நிலங்களில் நெல் விளைவிக்க முடியாவிட்டால், பாசிபயறு விளைவியுங்கள்” என்று கூறுகிறார். இது, “பாண் இல்லாவிட்டால், கேக் சாப்பிடுங்கள்” என்று சொன்ன பிரான்ஸ் நாட்டு கொடுங்கோல் அரசியை ஞாபகப்படுத்துகின்றது.

வெள்ளைபூண்டு ஊழலை கண்டு பிடித்து, அம்பலப்படுத்திய முன்னாள் நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் துசான் குணவர்தன, வெளிநாடு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். இது என்ன கோலம்? குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிவது ஒருபுறம் இருக்க, குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் நடவடிக்கையை எடுத்த நேர்மையான அதிகாரிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

இன்று இங்கே “ஊழல் எதிர்ப்பு குழு என்று ஏன் முன்னாள் அரசாங்க பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்கள்” என என்னை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். ஊழல் செய்தவர்கள் மீதான வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் வாபஸ் வாங்கி விட்ட நிலையில், ஊழல் செய்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரியும் போது, ஏன் நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்கள் என இவர்கள் என்னை கேட்கிறார்கள்.

நான் மனோ கணேசன். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவன். எங்கள் கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான, தைரியமுள்ள சுதந்திரமான கட்சி. இது மக்களின் கட்சி. எம்மை எவரும் பயமுறுத்த முடியாது. நாங்கள் பயந்து ஒதுங்க மாட்டோம். அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.