அமைச்சர் வியாழேந்திரனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை செய்ய கோரிக்கை !!
கொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் கொலை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் கையடக்க தொலைபேசி அழைப்பு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னாள் சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தர படுகொலை தொடர்பில் நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்தவழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி என். கமலதாஸ் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கானது நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற வேளையில் இராஜாங்க அமைச்சர் தன்னுடைய வீட்டிலிருந்தார் என்றும் அதன் பின்னரே அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார் என்ற தகவலும் இருக்கும் காரணத்தினால் இரண்டு விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என்று நீதிவானிடம் கோரியிருக்கின்றோம்.
இராஜாங்க அமைச்சர் எப்போது வீட்டைவிட்டு வெளியேறினார் என்பதை அறிவதற்காக வீதிகளில் உள்ள சிசிரிவி காட்சிகள் விசாரணை செய்யப்பட வேண்டும்.
குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முறையாக முன்னெடுக்காத காரணத்தினால் குறித்த வழக்கானது கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீதிவான் தெரிவித்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முதன் முதலில் தொடர்பினை ஏற்படுத்திய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அந்த அழைப்பை எடுத்த இடம் மற்றும் வழியில் இருந்த சிசிரிவி காணொளிகளை உடன் பரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த வழக்கானது எதிர்வரும் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.