கேரளாவில் வனத்துறை மந்திரி உள்பட 45,439 பேருக்கு கொரோனா- கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்க முடிவு…!!
கேரளாவில் கொரோனா 3-வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் வனத்துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன், முன்னாள் முதல் மந்திரி அச்சுதானந்தனின் மகன் ஆகியோருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
98 வயதாகும் அச்சுதானந்தனுக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது மகனுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவருக்கும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தை போல கேரளாவிலும் ஞாயிற்றுகிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வார நாட்களில் பொது நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதுபோல பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கேரள அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு விழாக்களும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொது இடங்களுக்கு முக கவசம் அணிந்தே வரவேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.