மேற்கு வங்காள அலங்கார ஊர்தி தொடர்பாக உத்தரவிட முடியாது: பொதுநல வழக்கு தள்ளுபடி…!!
டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பின்போது மேற்கு வங்காள மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாட்டுக்கு சேவையாற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் சிறப்பம்சங்களுடன் கூடிய மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, மேற்கு வங்காள அலங்கார ஊர்தியை அணிவகுப்பில் சேர்க்கும்படி கூறியிருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காள அலங்கார ஊர்தியை அனுமதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர், பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் மற்றும் மத்திய-மாநில அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மனுதாரர் கடைசி கட்டத்தில் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக கூறிய நீதிபதிகள், புதன்கிழமை குடியரசு தின விழா நடைபெற உள்ள நிலையில், எந்த உத்தரவையும் இப்போது வழங்க முடியாது என்று என்று தெரிவித்தனர். மேலும் வழக்கு மனுவில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக் காட்டியதையும் நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர்.
நேதாஜியின் முப்பரிமாண ஒளி சிலை
முந்தைய அரசாங்கங்களால் நேதாஜி புறக்கணிக்கப்பட்டாலும், தற்போதைய அரசாங்கம் நேதாஜியை சிறப்பிக்கிறது. சுதந்திரத்திற்கான அவரது பங்களிப்பை போற்றுகிறது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தின்போது தெரிவித்தார். நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதியை பராக்கிரம தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து, ஜனவரி 23 முதல் 30ஆம் தேதி வரை விழாவாக கொண்டாடுகிறது. நேதாஜியின் முப்பரிமாண ஒளி சிலை (ஹாலோகிராம்) இந்தியா கேட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நேதாஜியின் உருவச் சிலை ஆகஸ்ட் மாதம் நிறுவப்படும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.