20 மீனவர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்…!!
எல்லை தாண்டி சென்றதாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்தியர்களின் தண்டனைக் காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று வாகா எல்லையில் வைத்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு மீனவர்கள் அனைவரும் இன்று மாலையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (பிஎஸ்எஃப்) ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த எதி தொண்டு நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களுக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் அவசரகால பயணச் சான்றிதழின் அடிப்படையில் அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். எல்லையில் இந்திய பகுதிக்குள் கால் வைத்ததும், அவர்கள் மண்டியிட்டு தாய்மண்ணை முத்தமிட்டனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று இரவு அவர்கள் அமிர்தசரஸ் நகரில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும், நாளை அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.