எதிர்மறையான மனநிலையிலிருந்து சமூகம் மாற வேண்டும் – தேசிய மகளிர் ஆணையம் வேண்டுகோள்….!!
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொடடி நேற்று பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கிற்கு மகளிருக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இணைய வழியே நடைபெற்ற இந்த கருத்தரங்கில், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உட்பட பெண் குழந்தைகள் தொடர்பான பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் பேசிய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளதாவது:
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களின் திறமைகளை நிரூபித்துள்ளனர். மகளிருக்கான தேசிய ஆணையம் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு தளத்திலும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பும், அதிகாரமளித்தலும் உறுதி செய்யப்படுகிறது. தரமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்த இளம்பெண்களுக்கு மத்திய அரசு வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் எதிர்மறையான மனநிலையிலிருந்து சமூகம் மாற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இளம்பெண்கள் முன்வந்து மாற்றத்தின் முகவர்களாகத் திகழ வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.