இந்த வார இறுதியில் டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா ஒப்படைப்பு…!!
பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, நஷ்டத்தில் இயங்கி வந்தது. அதனால் அதை ஏலத்தில் விற்க மத்திய அரசு முன்வந்தது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான தலாஸ் பிரைவேட் லிமிடெட் மற்ற போட்டியாளர்களை விட அதிக விலைக்கு (ரூ.18 ஆயிரம் கோடி) கேட்டதால், கடந்த அக்டோபர் 8-ந் தேதி, அந்த நிறுவனத்துக்கு ஏர் இந்தியா விற்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, விருப்ப கடிதம் வழங்குதல், பங்கு கொள்முதல் ஒப்பந்தம் போன்ற நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்தநிலையில், மீதியுள்ள நடைமுறைகள் சில நாட்களில் முடிக்கப்பட்டு, இந்த வார இறுதிக்குள் டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ஒப்பந்தப்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரசும் ஒப்படைக்கப்படும். ‘ஏர் இந்தியா சாட்ஸ்’ என்ற துணை நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளும் வழங்கப்படும்.
2003-2004 ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் முதலாவது தனியார்மயமாக்கல் இதுதான். ஏர் ஏஷியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களை தொடர்ந்து, டாடா குழுமத்தின் கைவசம் வரும் 3-வது விமான நிறுவனம், ஏர் இந்தியா ஆகும்.