பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமனம்…!!
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தானின் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதுகுறித்து பாகிஸ்தான் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் 177-ஆவது பிரிவின்படி, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஆயிஷா மாலிக், பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதற்கான நியமனத்தில் அதிபா் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஆயிஷா மாலிக், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகள் வரை லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வந்தார். சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும், விவாசாயிகள் பிரச்சனையில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.
ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு பாகிஸ்தான் நீதித் துறை ஆணையம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நாடாளுமன்ற குழு இதை பரிசீலித்தது.
லாகூா் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் 4-வது இடத்தில் ஆயிஷா மாலிக் இருந்தார் . ஆனாலும், பணி மூப்பை கருத்தில் கொள்ளாமல் ஆயிஷா மாலிக்கைத் தோ்வு செய்து, அதிபரின் ஒப்புதலுக்கு அந்தக் குழு அனுப்பி வைத்தது. இதை தொடா்ந்து, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஒப்புதல் அளித்தார்.