“மண்ணை பாதுகாக்கும் சேதன விவசாயப் புரட்சி – யாழ் மாவட்டத்துக்கான தற்சார்பு பொருளாதார மேம்பாடு” !! (படங்கள்)
“மண்ணை பாதுகாக்கும் சேதன விவசாயப் புரட்சி – யாழ் மாவட்டத்துக்கான தற்சார்பு பொருளாதார மேம்பாடு”
அரசாங்கத்தின் விசேட அபிவிருத்தி நன்கொடை நிதி மூலத்தின்கீழ் வடக்கு மாகாண சபை ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் “சேதன பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தி திட்டம்” பயனாளிகளுக்கான உதவித்திட்டங்கள் கையளிப்பு நிகழ்வு இன்று(25.01.2022) இடம்பெற்றது
மாகாண விவசாய திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உதவித்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.
அங்ஜன் இராமநாதன் உரை
நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் அவர்கள், “வடக்கிலுள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் விவசாய குடும்பங்களை பாதுகாக்க வேண்டியதும் அவர்களின் விவசாயத்தை பெறுமதிசேர்க்க வேண்டியதும் நமது பொறுப்பாகும், அதனடிப்படையில் இதுவரைகாலமும் இரசாயன உர கொள்வனவுக்காக வெளிநாட்டுக்கு வழங்கப்படும் பெருமளவு நிதியை பயன்படுத்தி உள்நாட்டில் சேதன உர உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக வழங்குவதனூடாக எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க முடியும்” என தெரிவித்தார்.
மேலும்,
தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில் எம் மண்ணிலேயே எம் வளங்களை கொண்டு விவசாய புரட்சியை செய்ய வேண்டிய தருணமொன்றாக இதை பயன்படுத்துவோம். அதனூடாக அறுவடை செய்யப்படும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்து பெறுமதி சேர் ஏற்றுமதிகளாக அவற்றை மாற்றியமைத்து யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றுமதி செய்ய முடியும்.
உதாரணமாக “சேதன விவசாயமூடாக பெறப்படும் காய்கறிகளுக்கு இந்தியாவில் உள்ள சந்தை வாய்ப்பை நாம் பயன்படுத்தி, யாழ் விமான நிலையத்தினூடாக ஏற்றுமதி செய்ய பெரும் வாய்பொன்று எமது விவசாய தொழில்முயற்சியாளர்களுக்கு உள்ளது. இப்படியான சாத்தியப்பாடுகளையெல்லாம் கருத்தில்கொண்டு இந்த கருவிகளை வினைத்திறனோடு பயன்படுத்துமாறு அனைத்து விவசாயிகளையும் அழைக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.
# நிகழ்வு தொடர்பாக :
அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத்திட்டத்துக்கமைய, பசுமை விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் அரசாங்கத்தால் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவற்றினடிப்படையில், யாழ் மாவட்ட விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில், கூட்டெரு தயாரிப்பு, சேதன பசளை, மண்புழு உரம் உற்பத்தியாக்கத்தில் ஈடுபடும் விவசாயிகளை இனங்கண்டு, அரசாங்கத்தினால் மாவட்ட ரீதியில் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உதவித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
அதனடிப்படையில், பல்தூளாக்கி இயந்திரங்கள், உர உற்பத்திக்கான கருவித் தொகுதிகள், அசோலா பசளை உற்பத்திக்கான கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் தாவர பீடைநாசினி தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மானிய அடிப்படையில், ஈர அரைக்கும் இயந்திரம், திரவ பசளை தயாரிப்பதற்கான இயந்திரங்கள் என்பனவும், பசுந்தாள் பசளை தயாரிப்புக்கான உபகரணங்களும், அவற்றுக்கான காட்டுச்சூரியகாந்தி, கிளிசறியா உள்ளிட்ட பயிர்வகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இவற்றோடு, சேதன பசளைகளையும் பயிர்களையும் விற்பனை செய்வதற்கான நிலையங்கள், திருநெல்வேலி, அச்சுவேலி, சாவகச்சேரி, புத்தூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள விவசாய அபிவிருத்தி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மாகாண விவசாய பணிப்பாளர் – வடக்கு மாகாணம்,
யாழ் மாவட்டத்துக்கான பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர் – யாழ் மாவட்டம், பிரதி ஆணையாளர் விவசாய திணைக்களம் – யாழ்ப்பாணம், மற்றும் விவசாய போதனாசிரியர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”