கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய முதலை!!
முந்தல் – சின்னப்பாடு வென்னப்பு வல கடற்பிரதேசத்தில் 7 அடி முதலையொன்று மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய நிலையில் நேற்று (24) மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வலையிலேயே இந்த முதலை சிக்கியதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.
கடலில் இருந்து மீனவர்கள் வலையை கரையை நோக்கி இழுத்துக் கொண்டு வந்த போது அந்த வலை பெரும் கனமாக காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
குறித்த மீன் வலை கரையை வந்தடைந்ததும் அந்த வலைக்குள் பெரிய மீன் ஒன்று சிக்கிவிட்டதாகவே தாம் முதலில் கருதியதாகவும் மீனவர்கள் கூறினர்.
எனினும், அந்த வலைக்குள் இருந்து 7அடி நீளமான முதலை ஒன்று இருப்பது பின்னர்தான் மீனவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இதுபற்றி ஆனவிழுந்தான் மற்றும் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டன.
குறித்த தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீனவர்களின் உதவியோடு குறித்த முதலையை பிடித்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த முதலையை வில்பத்து சரணாலய பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.