பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும்!!
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும். அதன் நிமித்தமே சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது. இதன்மூலம் எமது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் அண்மையில் நாம் பேச்சு நடத்தியிருந்தோம். இதன்போது பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் பிரதானமாக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்தவகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்வைத்திருந்த நிலையில் அதற்கு நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு எமது மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முறையாக இயங்கவில்லை. உட்கட்டமைப்பு வசதிகளும் உரிய வகையில் இல்லை. இந்நிலையில் 450 சுகாதார நிறுவனங்களில் முதற்கட்டமாக 59 ஐ அரசு பொறுப்பேற்று, நிர்வகிக்க உள்ளது. இதன்மூலம் எமது மக்களுக்கு உரிய சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். எஞ்சிய சுகாதார நிறுவனங்களையும் அரசு விரைவில் பொறுப்பேற்கும் என்றார்.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவிக்கு புதியவர் இன்னும் நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு, விரைவில் தேசிய சபைக் கூட்டப்படும். அக்கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று ஜீவன் தொண்டமான் பதிலளித்தார்.