இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!! (வீடியோ)
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 55 இந்திய மீனவர்களுக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு கடற்பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 55 மீனவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தனர்.
அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , இந்திய மீனவர்கள் 55 பேருக்கும் ஆறு மாதகால சாதாரண சிறைதண்டனை விதிக்கப்பட்டு அதனை ஐந்து வருடங்களுக்கு நீதிமன்று ஒத்திவைத்துள்ளது.
அதேவேளை இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
ஐந்து வருட கால பகுதிக்குள் குறித்த 55 மீனவர்களும் மீள கைது செய்யப்பட்டால் , ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதுடன் , அப்போது அத்துமீறிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு பிறிதாக நடாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”