சீன தலைநகர் பீஜிங்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று…!!
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் (பிப்ரவரி மாதம்) குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
பீஜிங்கில் உள்ள பெங்டாய் மாவட்டத்தில் 25 பேர் மற்றும் பிற இடங்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர், தொற்று நோய்க்கான அதிக ஆபத்து இருப்பதாக கருதப்படும். மக்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று பீஜிங் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே பெங்டாய் மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 20 லட்சம் பேர் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அரசு உத்தரவிட்டு, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதனிடையே ஒலிம்பிக் போட்டிகளுக்காக பீஜிங் வந்துள்ள தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளில் 39 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் சீனாவின் வடக்கு நகரமான சியானில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த 1 மாத கால ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.