உக்ரைனுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் ஐரோப்பிய யூனியன்…!
சோவித் ரஷியாவில் இருந்து பல நாடுகள் பிரிந்து தனி நாடானது. அதில் ஒன்று உக்ரைன். ரஷியாவின் எல்லைப் பகுதியில் உக்ரைன் அமைந்துள்ளது. இரு நாடுகளின் எல்லையாக கிரிமியா உள்ளது. இந்த நகரத்தை ரஷியா ஏற்கனவே சண்டையிட்டு கடந்த 2014-ம் ஆண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டது.
அதில் இருந்து ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஷியா உக்ரைன் எல்லையில் ஆயிக்கணக்கான படை வீரர்களை குவித்துள்ளது. எந்த நேரத்திலும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே ரஷியா நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் போர் தளவாடங்கள், போர்க்கப்பல்களை கிழக்கு ஐரோப்போ நோக்கி அனுப்பி வைத்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் தலைவர்
இந்த நிலையில் உக்ரைனுக்கு 1.2 பில்லியன் யூரோ (இந்திய பண மதிப்பில் சுமார் 10138.80 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளார். ஐரோப்பிய யூனியன் கமிஷன் புதிய அவசர கால நிதியாக இதை வழங்க பரிந்துரை செய்துள்ளது. இந்தத் தகவலை ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா கிரிமியாவை தன்னுடன் இணைத்தபோது, உக்ரைனுக்கு 17 பில்லியன் யூரோ அளவில் ஐரோப்பிய யூனியன் கடன் வழங்கியது.